ஆண்டுதோறும் பூமியில் வெப்பம் அதிகரிப்பதால் கடல் நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம்

ஆண்டுதோறும் பூமியில் வெப்பம் அதிகரிப்பதால் வருங்காலங்களில் கடல் நகரங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் அபாயம் உள்ளது என்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை அரசு செயலாளர் ராசாராம் தெரிவித்துள்ளார்.

கருத்தரங்கம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மதுரை உலக தமிழ் சங்கம், பல்கலைக்கழக தமிழியல்துறை இணைந்து சங்க இலக்கியத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தேசிய கருத்தரங்கை நேற்று நடத்தியது.

இதற்கு சென்னை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் முனைவர் ராசாராம் தலைமை தாங்கினார். சிதம்பரம் சப்–கலெக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார். முன்னதாக தமிழ்வளர்ச்சித் துறை இயக்குனர் சேகர் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் கட்டுரை தொகுப்பு நூலை வெளியிட்டு அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகியும், முதன்மை செயலாளருமான ஷிவ்தாஸ்மீனா பேசினார். இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி துறை அரசு செயலாளர் ராசாராம் பேசியதாவது:–

வளமான வாழ்வு

சங்க இலக்கியம் என்பது பழந்தமிழர்கள் நமக்கு கொடுத்த பெரும் கொடை என்று சொல்லலாம். ஏனெனில் சுற்றுச்சூழல் பற்றிய பல கருத்துக்கள் அதில் இடம் பெற்று உள்ளது. இலக்கியங்களில் கூட சுற்றுச்சூழல் அவசியம் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.

நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகியவை இந்த உலகம் தோன்றுவதற்கான அடிப்படையாகும். இவை அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது. இதன் அடிப்படையில் தான் உலகம் இயங்குவதாக தொல்காப்பியத்தில் கூறப்படுள்ளது.

வளமான வாழ்வு என்பது இயற்கையோடு இணைந்த வாழ்வு என்பதை மனிதன் மறந்து, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தன் சுய லாபத்திற்காக இயற்கை வளங்களை அழிக்கிறான்.

பூமியின் வெப்பம் அதிகரிப்பு

ஆண்டு தோறும் 2 டிகிரி அளவில் வெப்பம் அதிகரிக்கிறது என்று கூறுகிறார்கள். வரும் காலங்களில் கடல் நகரங்கள் நீரில் மூழ்கி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இன்று தாஜ்மஹால் அதன் நிறத்தை இழந்து வருகிறது. அதேபோல் கங்கா, யமுனா, காவிரி ஆறுகள் தன் நிலையை மாற்றி உள்ளன. மனிதன் பின்பற்றும் நீர் சிக்கனம், இயற்கை வளங்கள், பறவை, விலங்குகளுடன் அன்பு, இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறை, இவற்றை பொறுத்து நாட்டின் வளம் அமையும் என்கிறார் அவ்வையார். ஆனால் அவ்வாறு இன்று இல்லை.

மனிதர்கள் பேராசையை குறைத்து கொண்டு இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தால் நாடு மேலும் மேலும் பல சிறப்புகளை அடையும். சுனாமி, புவி வெப்பம், ஓசோன் மண்டலத்தில் ஓட்டை போன்ற வற்றிற்கு தீர்வு காண முடியும்.

மரம் வளர்ப்பு

புங்கை மரத்தில் பல சிறப்புகள் உள்ளது. இத்தகைய மரங்களை சென்னை மாநகரம் முழுவதும் நட்டால், சுமார் 2 டிகிரி அளவிற்கு வெப்பம் குறையும் என்கின்றனர். இதேபோல் தான், நமது மூதாதையர்கள் மருத்துவ குணமிக்க மரங்களை நடுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அறிவியல், தொழில் நுட்பம், நாகரிக வளர்ச்சியில் உள்ள நகர புறத்தினர் தற்போது தொட்டிகளில் அழகிற்காக செடிகளை வளர்த்து வருகின்றனர்.

இயற்கை என்பது அழியும் போது மனித வளமும் அழியும். எல்லாவற்றையும் அரசே செய்ய வேண்டும் என்கிற நிலை உருவாகி இருக்கிறது. தனி மனிதன் நிலத்தடி நீர் பாதுகாப்பு, கடல் வளம் காப்பது, பசுமையை பேணுவது, நீர் நிலைகளை காப்பது, போன்ற கடமையில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மைய முன்னை இயக்குநர் சண்முகம்,இந்திய மொழிப்புலம் முதன்மையர் திருவள்ளுவன், தமிழியல்துறை தலைவர் ஞானம், பேராசிரியர் அரங்க.பாரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முடிவில் உலக தமிழர் சங்கம் தனி அலுவலர்(பொறுப்பு) பசும்பொன் நன்றி கூறினார்.

 

earth

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.