பூமியின் 70 சதவிகித நிலப்பரப்பு தண்ணீரால் சூழப்பட்டிருப்பதால் நாம் அனைவரும் பூமியில் நீர்வளம் எக்காலத்திலும் குன்றாமல் தேவைக்கு அதிகமாக காணப்படும் என எண்ணுகின்றோம். ஆனால் உண்மையில் உலகில் உள்ள நீரில் 97.5 சதவீதம் நீர் கடல் நீர். அதாவது உப்பு நீர். உலக நாடுகளின் தனிமனித தண்ணீர் நுகர்வு ஆண்டிற்கு 1700 கன லிட்டருக்கும் குறைவாக அமைந்தால் அது தண்ணீர் பற்றாக்குறை என வரையறுக்கப்படுகின்றது (IPCC, 2007).
நமது குடிநீர் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கும், விவசாயத்திற்கும் உபயோகப்படும் நீர் நம்பமுடியாத அளவிற்கு மிகவும் குறைவாக புவியின் மொத்த நீரின் 2.5 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்த கூடிய நிலையில் உள்ளது. மேலும் மேற்கண்ட 2.5 சதவீத நீரில் 70 சதவிகிதமான நீர் பனிப்பாறைகளாக உறைந்து காணப்படுவதால் உலகின் 2.7 பில்லியன் மக்கள் வருடத்தின் ஒரு மாதமாவது தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு உள்ளாகின்றனர் (IPCC, 2007).
உலக பொருளாதார மன்றம் ஜனவரி 2015-ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் சமூகத்தில் மிகப்பெரிய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் உலகின் முதன்மையான ஆபத்தாக தண்ணீர் தட்டுப்பாட்டால் ஏற்படும் நெருக்கடி விளங்கும் என அறிவித்துள்ளது (World Economic Forum, 2015 – Global Risks 2015 Report).
உலக நாடுகளின் தற்பொழுதைய தண்ணீர் நுகர்வு விகிதத்தை கணக்கிடும் பொழுது 2025ம் ஆண்டிற்குள் மொத்த மக்கள் தொகையில் 3ல் 2 பங்கு மக்கள் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையை சந்திப்பார்கள் என அறியலாம். உலகின் ஒட்டுமொத்த உபயோகிக்கத் தகுந்த 2.5 சதவீத நீர்வளத்தில் 70 சதவிகிதம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அவற்றுள் 60 சதவிகிதம் நீர், நீர்ப்பாசன அமைப்புகளில் காணப்படும் குறைபாடுகளான கசிவுகள், திறமையற்ற நீர் மேலாண்மை முறைகள் மற்றும் அதிகபடியான நிலத்தடி நீரை உறிஞ்சுகின்ற தாவரவகையை பயிரிடுவதனாலும் வீணாகின்றது. அதிக அளவில் உணவு உற்ப்பத்தி செய்யும் நாடுகளான இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகியவை தங்களது நீர்வள ஆதாரங்களின் பயன் அளிக்கும் உச்சவரம்பை நெருங்கிவிட்டது.
பின்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் மக்கள் தொகை பெருக்கம், பருவ நிலை மாற்றம் மற்றும் நீர் ஆதாரங்களின் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து கடந்த 2000 ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதற்கு பருவ நிலை மாற்றத்தைவிட நான்கு மடங்கு அதிகமான மக்கள் தொகை பெருக்கமே முக்கிய காரணமாக விளங்குவதாக கூறுகின்றனர். உலக நாடுகளில் 1800-ம் நூற்றாண்டுகளில் மிதமான தண்ணீர் பற்றாக்குறை உணரப்பட்டது. ஆனால் 1900-ம் நூற்றாண்டுகளில் உலகின் 2 சதவீதம் மக்கள் தொகை கடுமையான தண்ணீர் பற்றாக்குறைக்கு உள்ளான பொழுது இப்பிரச்சனை முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. மேலும் தண்ணீர் பற்றாக்குறை 1960 ஆம் ஆண்டிலிருந்துதான் மிகவும் வேகமாக அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில் உலக மக்கள் தொகையில் ஆண்றொன்றுக்கு 500 – 1000 கனலிட்டர் தண்ணீருக்கும் குறைவாக பயன்படுத்தும் மக்களின் விகிதாச்சாரம் 9 சதவிகிதத்திலிருந்து (287 மில்லியன்) 35 சதவிகிதமாக (2,296 மில்லியன்) 2005 ல் உயர்ந்தது.
புவியின் பெரிய நிலப்பரப்பு மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் வேகம் மற்ற பிராந்தியங்களை விட அதிகமாக காணப்படுகின்றது. கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு ஆப்ரிக்கா நாடுகளில் மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேர் தண்ணீர் பற்றாக்குறையின் ஏதாவது ஒரு நிலையில் 1900-களிலிருந்து வாழ்கின்றனர். இத்தகைய நிலை மத்திய கிழக்கு பகுதியில் 1960 ஆம் ஆண்டு வரை ஏற்படவில்லை. மேலும் தெற்கு ஆசிய பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இக்காலகட்டத்திற்கு சற்று தாமதமாக ஏற்ப்பட்டது. ஆனால் தற்பொழுது தெற்கு ஆசியப்பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் போக்கு மிகவும் வேகமாக அதிகரித்துள்ளது. தற்பொழுது தெற்காசிய பகுதிகளில் மொத்த மக்கள் தொகையில் 90 சதவிகிதம் பேர் தண்ணீர் பற்றாக்குறையின் ஏதாவது ஒரு நிலையில் பாதிக்கப்படுகிறார்கள்.
இன்றைய சூழலில் நீர் தட்டுப்பாடு மிகவும் அதிகரித்துள்ளதால் மக்கள் பல்வேறு விதமான தகவமைப்பு நுட்பங்களான நீர்த்தேக்கங்கள் நிர்மாணித்தல், நிலத்தடி நீர் பாசனம் முதலியவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால் பல்வேறு பகுதிகளில் போதுமான நீர் ஆதாரம் இல்லாததால் இத்தகைய தகவமைப்பு நுட்பங்கள் கூட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருப்பதில்லை. அதன் விளைவாக கட்டமைப்பு சாராத பிற நடவடிக்கைகளின் தேவை அதிகரித்துள்ளது. அவற்றுள் நீரின் பயன்பாடு திறன் அதிகரிப்பதில் கவனம் செலுத்துதல், நீர் பயன்பாட்டின் அளவுகளை குறைத்தல், நாட்டின் அல்லது பிராந்தியத்தின் பொருளாதார கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்துதல், நீர் பற்றாக்குறை இல்லாத பிராந்தியத்தின் நீர் நிலைகளை நீர் பற்றாக்குறை உள்ள பிராந்தியத்தோடு ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை கருத்தில் கொள்ளுதல் இன்றியமையாததாகும்.
By Dr. T. Anitha
Reference :
www.climate.org/topics/water.html
https://environmentalresearchweb.org/cws/article/news/43685
https://HYPERLINK “https://stacks.iop.org/ERL/5/034006/mmedia”stacks.iop.org/ERL/5/034006/mmedia