கடல் சீற்றத்தால் கட்டடங்கள் இடிந்து விழும் அபாயம்
உவரியில் தூண்டில் பாலம் அமைக்கும் பணியை உடனே துவங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
உவரி கடற்கரையில் கடந்த சில ஆண்டுகளாகவே கடல் சீற்றம் மிக அதிகளவில் ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னதாகவே உவரி அந்தோணியார் திருத்தலம் முன்புள்ள கடற்கரை முதல் கப்பல் மாதா ஆலயம் உள்ள கடற்கரை பகுதி வரை சுமார் 600 மீட்டர் தூரமுள்ள பகுதியில் இருந்த பல்வேறு வீடுகள், ரோடு, வலை பின்னும் கூடம், மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை ஏற்கனவே அடியோடு அடித்து செல்லப்பட்டு விட்டன.தற்போது இப்பகுதியில் உள்ள சுமார் 25 வீடுகள் கடல் அரிப்பால் இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே இவ்வீடுகளில் வசிக்கும் மக்கள் கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும் அமாவாசை, பவுர்ணமி காலங்களிலும் மற்றும் இரவு நேரங்களிலும் உயிரை கையில் பிடித்து கொண்டு வசித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உவரி கடற்கரையில் கப்பல் மாதா ஆலயம் முன் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 50 அடி நீளமுள்ள தடுப்புசுவர் கடல் சீற்றம் காரணமாக கடல் அலையால் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதனால் கப்பல் மாதா ஆலயம் அமைந்துள்ள மணல் தரைப்பகுதியில் இருந்து சுமார் 7 அடி தாழ்வாக கடற்கரை பகுதி அமைந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் உவரி கப்பல்மாதா ஆலயத்தை பார்வையிட தினமும் வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கப்பல் மாதா ஆலயத்தின் முன் நின்று கொண்டு கடற்கரை அழகை பார்த்து ரசிக்கவும், கடற்கரை பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மீறி சென்றால் மணல் சரிந்து பள்ளத்தில் விழுந்து கடல் அலையால் இழுத்து செல்லப்படும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.
உவரியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் விதமாக இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தூண்டில் பாலம் அமைக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து அரசு ஏற்கனவே 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாதங்கள் பல ஆகியும் இதுவரை பல்வேறு பிரச்னைகள் காரணமாக தூண்டில் பாலம் அமைக்கும் பணி துவங்காமலே உள்ளது.காலங்கள் செல்ல செல்ல உவரி கடற்கரை பகுதியை கடல் அலை கொஞ்சம் கொஞ்சமாக கபளிகரம் செய்து வருகின்றது. எனவே கடற்கரையில் வசிக்கும் மீனவ மக்கள் ஒருவித கலக்கத்துடனே வாழ்ந்து வருகின்றனர். எனவே அரசு உடனே நடவடிக்கை எடுத்து தூண்டில் பாலம் அமைக்கும் பணியை துவக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உவரி பஞ்., தலைவி தேம்பாவனி கூறுகையில், “”உவரியில் தூண்டில் பாலம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பணி துவங்க காலதாமதம் ஆவாதல் கடல் அரிப்பு பாதிப்பு மிகவும் அதிகமாகி கொண்டே செல்கிறது. அரசு உடனடியாக இப்பணியை துவக்கிட வேண்டும்” என்றார்.
source : http://www.dinamalar.com//district_detail.asp?id=861362&dtnew=11/30/2013