இரவிபுத்தன்துறையில் கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்த மீனவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரைப் பகுதியான சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இருவாரமாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் இரவிபுத்தன்துறையில் 27 வீடுகளை கடல் நீர் இழுத்துச் சென்றுள்ளது. 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து, எந்நேரத்திலும் கடல் நீர் இழுத்துச் செல்லும் நிலையில் உள்ளன.
இந்நிலையில் வீடுகளை இழந்த அப்பகுதி மீனவர்களில் 117 குடும்பத்தைச் சேர்ந்த 407 பேர் அங்குள்ள புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியில் கடந்த ஒரு வாரமாக தங்கியுள்ளனர். இம் மீனவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இப்பகுதி பங்குப் பேரவை நிர்வாகிகள்தான் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.
இங்கு தங்கியுள்ள இரவிபுத்தன்துறை ஜோசப் காலனியைச் சேர்ந்த எச். விஜு கூறியதாவது: இங்குள்ள பெரும்பாலான மீனவர்களின் வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மற்றவர்களின் வீடுகள் பாதி இடிந்தும், எந்நேரமும் இடியும் நிலையிலும் உள்ளன. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு மாற்று இடம் வழங்கவேண்டும் என்றார் அவர்.
பெண்கள் கூறும்போது, வீடுகளில் இருந்த துணி, பாத்திரம், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பெரும்பாலான பொருள்களை கடல்நீர் இழுத்துச் சென்று விட்டது. மாற்று உடை கூட இல்லாமல் இப்பள்ளியில் தஞ்சமடைந்துள்ளோம்.
அரசு அதிகாரிகள் இதுவரை எங்களை கண்டுகொள்ளவில்லை. உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களும் எங்களுக்கு இதுவரை வழங்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சின்னத்துறை பள்ளியில் தங்கியுள்ள மீனவர்களையும், இரவிபுத்தன்துறை பள்ளியில் தங்கியுள்ள மீனவர்களையும் கிள்ளியூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். ராஜேஷ்குமார் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதேபோல, தூத்தூர் பகுதியில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும் என இப்பகுதி பங்குத்தந்தையர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு முதன்மைகுரு ராஜசேகர் தலைமை வகித்தார். இதில் பங்குத்தந்தையர்கள் இரயுமன்துறை மால்பின், பூத்துறை ஆன்றோஜோறிஸ், சின்னத்துறை ஷாபின், இரவிபுத்தன்துறை அரிஸ்டோ, கிள்ளியூர் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி உள்ளிட்ட 8 மீனவக் கிராமங்களில் பூத்துறை, சின்னத்துறை, இரவிபுத்தன்துறை உள்ளிட்ட பகுதிகளில் முறையாக கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்காததால் இப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாக சின்னத்துறையில் 22 வீடுகள், இரவிபுத்தன்துறையில் 27 வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்துள்ளன. மேலும் பல வீடுகள் இடியும் நிலையில் உள்ளது.
குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடலோர பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்படாத இடங்கள் குறித்து பொதுப்பணித் துறையின் கடலரிப்பு தடுப்புப் பிரிவு ஆய்வு மேற்கொண்டு ரூ. 114 கோடியில் திட்டம் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின்படி மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. இத்திட்டத்துக்கு மாநில அரசு நிதி ஒதுக்காததால் திட்டம் முடங்கியுள்ளது.
எனவே தேவையான இடங்களில் தடுப்புச் சுவர் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றனர்.
Link : http://www.dinamani.com/edition_thirunelveli/kanyakumari/2016/06/14/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87/article3480978.ece