குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் 200 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது; அலையில் சிக்கி சிறுவன் சாவு

குமரி மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர கடல் சீற்றத்தால் சுமார் 200 வீடுகளை கடல் நீர் சூழ்ந்தது. ராட்சத அலையில் சிக்கி சிறுவன் உயிரிழந்தான்.img 4
கடல் சீற்றம்

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் கேரள எல்லையில் உள்ள நீரோடி வரை சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடற்கரை பகுதி உள்ளது. இதையொட்டி 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவர்களின் வீடுகள் கடற்கரையை ஒட்டியே அமைந்து உள்ளன. கடலில் சீற்றம் அதிகமாக இருந்தால் வீடுகளின் வாசல் வரை அலைகள் வந்து செல்லும்.

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நள்ளிரவில் இருந்து சூறைக்காற்றும் பயங்கரமாக வீசியது. இதனால் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்கால், பிள்ளைத்தோப்பு, குளச்சல், முட்டம் உள்பட பல பகுதிகளில் கடல் சீற்றம் பயங்கரமாக இருந்தது.

கடல்நீர் புகுந்தது

இதன் காரணமாக அலைகள் அதிக உயரத்துக்கு எழும்பி, ஆக்ரோஷமாக கரைக்கு வந்தன. அழிக்கால் பகுதியில் கடற்கரை மணற்பரப்பையும் தாண்டி வந்த அலைகள் கடற்கரையோரம் இருந்த வீடுகளை சூழ்ந்தன. அந்த பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல்நீர் சூழ்ந்தது. இதில் பல வீடுகளுக்குள்ளும் கடல்நீர் புகுந்தது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதில் சில வீடுகளின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. தூத்தூர் பகுதியில் 5 வீடுகளும், முள்ளூர்துறையில் 2 வீடுகளும் இடிந்து விழுந்தன. தேங்காப்பட்டணம் துறைமுகம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் கடல்நீர் புகுந்தது. அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 படகுகள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பாறையில் மோதி உடைந்தன.

கலெக்டர் பார்த்தார்

கடல் நீர் சூழ்ந்ததால் வீடுகளில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் கட்டுமரங்கள் மூலம் மேடான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாரிகள் விரைந்து சென்று சீற்றம் அதிகமாக உள்ள பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கினார்கள்.

அருகில் உள்ள மண்டபங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு வசதி செய்து கொடுக்கப்பட்டது. கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மற்றும் அதிகாரிகள் கடல் சீற்ற பாதிப்புகளை பார்வையிட்டனர்.

சிறுவன் சாவு

குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த மரியஜேம்ஸ்-பனிமேரி தம்பதியரின் அபிஷேக் என்ற 4 வயது மகன் கடற்கரையில் தனது 2 சகோதரர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ராட்சத அலையில் சிக்கி அபிஷேக் இழுத்துச் செல்லப்பட்டான். அவனது உடலை மீனவர்கள் பல இடங்களில் தேடினார்கள். அப்போது மரிய ஜேம்ஸ் வீட்டின் அருகே குளம்போல் தேங்கி நின்ற கடல் நீரில் அபிஷேக்கின் உடல் ஒதுங்கி கிடந்தது. இதில் மற்ற 2 சிறுவர்கள் உயிர் தப்பினார்கள்.

மரியஜேம்சின் முதல் மனைவியும், 2 குழந்தைகளும் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சிக்கி இறந்தனர். அதன்பிறகு 2-வது திருமணம் செய்த அவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். இவர்களில் ஒரு மகன் தான் தற்போது இறந்துவிட்டான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.