குளச்சல்: சுற்றுச்சூழல் அனுமதி இல்லாததால் மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை முடங்கியுள்ளது. ஆங்கிலேயேர் ஆட்சி காலத்திலேயே குமரி மாவட்டத்தின் கடலோர பகுதியில் தாது மணல் பெருமளவில் கிடைத்து வந்தது. இதனால் 1909ம் ஆண்டில் மணவாளகுறிச்சியில் தாது மணல் ஆலை தொடங்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1947ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் குமரி மாவட்டம் இருந்ததால் மணல் ஆலை திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பின்னரும் மணல் ஆலையை திருவிதாங்கூர் சமஸ்தானம் நிர்வகித்து வந்தது. 1966ல் மத்திய அரசிடம் மணல் ஆலை ஒப்படைக்கப்பட்டது.
இந்திய அரிய மணல் ஆலை என்ற பெயரில் இது தற்போது இயங்கி வருகிறது. இங்கு இல்மனைட், மோனாசைட், கார்னெட், ரூட்டைல், சிற்கான் போன்ற தாதுக்கள் பிரித்து எடுக்கப்படுகிறது. இந்த தாதுக்களை தனியார் நிறுவனங்கள் வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இதில் இல்மனைட் பெயின்ட் தயாரிக்கும் கம்பெனிகளுக்கும், கார்னெட் தேய்ப்பு தாள், கண்ணாடி வெட்டும் கருவி தயாரிக்கவும், ரூட் டைல் வெல்டிங் ராடு தயாரிக்கவும், சிற்கான் குளோசட், டைல்ஸ் போன்ற சானிட்டரி ெபாருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மோனாசைட் வெளியே விற்கப்படுவதில்லை. இது மத்திய அரசின் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதில் இருந்து தோரியம், யுரேனியம் போன்றவை பிரித்து எடுக்கப்படுகிறது.
தாதுமணல் சிங்கப்பூர், ஜப்பான் மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவிற்கு அந்நிய செலவாணி அதிக அளவில் கிடைத்து வந்தது. இந்த மணல் ஆலையின் தொடக்க காலத்தில மணல் எடுப்பது பிரிப்பது போன்ற பணிகளில் தொழிலாளர்கள், அதிகாரிகள் என 2000 பேர் வேலை பார்த்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தனியார் மணல் ஆலைகள் தாது மணல்களை பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டதால் இங்கு மூல ெபாருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் மணல் எடுப்பதை தடுக்க திட்டமிட்ட மத்திய அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற்றுதான் மணல் எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் தனியார் நிறுவனங்கள் மணல் எடுக்கவில்லை. ஆனால் மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கும் மணல் எடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவை என்பதால் இங்கும் மணல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கேரளா, ஓடிசாவில் உள்ள அரிய மணல் ஆலைகள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முறையான அனுமதி பெற்று தொடர்ந்து மணல் எடுத்து வருகின்றன.
ஆனால் மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கு இந்த அனுமதி கிடைக்காததால் ஆண்டுதோறும் ரூ.7 முதல் ரூ.10 கோடி வரை இழப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி இல்லாததால் மணல் போக்குவரத்திற்கு மாநில அரசும் தடை விதித்துள்ளது. இதனால் 40 முதல் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள தாது மணல் ஆலையில் இருப்பு உள்ளது. தொடர்ந்து ஆலை செயல்படாமல் முடங்கியுள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் உற்பத்தி அறவே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தற்ேபாது ஆலையில் 300 பேரே நேரடி ஊழியர்களாக பணியில் உள்ளனர். இதில் அதிகாரிகள் 75, டெக்னீஷியன் 125, மணல் பிரிக்கும் தொழிலாளர்கள் 100 பேர் ஆவர். இது தவிர 300 பேர் மணல் எடுக்க ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றுகின்றனர். ஆக மொத்தம் 600 பேர் இங்கு பணியாற்றி வருகின்றனர். வேலை இழப்பு ஏற்பட்டுள்ள தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் அனுமதி பெற்று ஆலையை நடத்துவதுபோல் இங்கேயும் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, தடையை மாற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல முடிவு வரும் என்று தெரிவித்தனர்.
Source: Dinakaran