சென்னைக்கு இவ்வளவுதான் ஆயுள்.. அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்!

சென்னைக்கு இவ்வளவுதான் ஆயுள்.. அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்!

அண்டார்டிகாவில் சுமார் 6 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரமாண்ட பனிப்பாறை (Larsen C Ice Shelf) ஒன்றில், கடந்த 12-ம் தேதி மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. ஒரு ட்ரில்லியன் டன் எடையும், சுமார் 200 முதல் 600 மீட்டர் தடிமனும் கொண்ட இந்த பனிப்பாறையில் விரிசல் ஏற்பட்டதை நாசாவின் ‘Aqua MODIS’ என்ற செயற்கைகோள் கண்டுபிடித்தது. உலக அளவில் சூழலியலாளர்களை மிகப்பெரிய அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் இச்செய்தியை, வெறும் செய்தியாக கருதி கடந்துவிட முடியாது. காரணம் பனிப்பாறைகள் உருகினால் கடல் மட்டம் அதிகரிக்கும். கடல் மட்டம் அதிகரித்தால் நிலப்பரப்பு சுருங்கும். நிலம் சுருங்கினால் மனிதன் இடம் பெயர்தல் வேண்டும்.
கடந்த மாதம் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று, `லேண்ட் யூஸ் பாலிஸி` (Land Use policy) என்ற இதழில் வெளியானது. அதில், ”உலக வெப்பமயமாதலால், துருவப்பகுதிகளில் இருக்கும் பனிப் பாறைகள் இயல்பைவிட அதிகமாக உருகிக்கொண்டிருக்கிறது. இந்நிலை நீடித்தால் கடல் மட்டம் உயர்ந்து, நிலப்பரப்பு சுருங்கி உலக மக்கள் தொகையில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியினர் அகதிகளாக மாற நேரிடும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கடல் மட்டம் உயர்ந்தால் மூழ்கும் நகரங்கள்:

கடல்மட்ட உயர்வு காரணமாக அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் அமெரிக்காவும், சீனாவும், இந்தியாவும் இருக்கின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரை நியூயார்க், மியாமி, பாஸ்டன் போன்ற நகரங்களும், இந்தியாவைப் பொறுத்தவரை சென்னை, புதுச்சேரி, விசாகப்பட்டினம், கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களும் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றன.

பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை:

2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை சுமார் 9 பில்லியனாக இருக்கும். இது 2100-ம் ஆண்டில் சுமார் 11 பில்லியனாக அதிகரிக்கும். அதன் படி கணக்கிட்டால், 2060-ம் ஆண்டில் சுமார் 1.4 பில்லியன் மக்களும், 2100-ம் ஆண்டில் சுமார் 2 பில்லியன் மக்களும் கடல் மட்ட உயர்வு காரணமாக அகதிகளாக இடம் பெயர்வார்கள் என்கிறது அந்த ஆய்வு முடிவு.

கடல்மட்டம் உயர்வு காரணமாக உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். உலகில் வளம் கொழிக்கும் நகரங்களில் பெரும்பான்மையானவை கடற்கரையில்தான் அமைந்துள்ளன. எனவே, கடல்மட்டம் உயரும்போது அந்நகர மக்களும், அவர்களது உடைமைகளும், அதனால் அப்பகுதியின் பொருளாதார சமநிலையும் பாதிப்புக்குள்ளாகும். இடம் பெயரும் மக்களால் நாட்டில் இடப்பற்றாக்குறை உண்டாகும். இந்தியா, சீனா போன்ற மக்கள் தொகை பெருக்கம் நிறைந்த நாடுகளில் இவை சமூகப் பிரச்னைகளைக்கூட ஏற்படுத்தலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.