சென்னையில் பலத்த காற்றுடன் சாரல் மழை கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

sea

சென்னையில் நேற்று பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. கடல் சீற்றமாக காணப்பட்டது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

வடகிழக்கு பருவமழை

கடந்த மாதம் 9–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னை நகரமே வெள்ளக்காடானது.

தாம்பரம், வேளச்சேரி உள்பட புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மழைவெள்ளத்தில் தத்தளித்தன. வில்லிவாக்கம், அண்ணாநகர் உள்பட சென்னை நகரின் மைய பகுதிகளையும் மழை வெள்ளநீர் சூழ்ந்தது.

பின்னர் மழையின் வேகம் குறைந்து, இயல்புநிலை திரும்பியது. 23–ந் தேதி பெய்த மிக கனமழையால் சென்னை நகரின் தாழ்வான பகுதிகளை மீண்டும் மழைநீர் குளம் போல சூழ்ந்தது.

கடந்த மாதம் 25–ந் தேதி முதல் மழை முற்றிலும் ஓய்ந்து வெயில் தலை காட்ட தொடங்கியது. சுட்டெரித்த வெயிலாலும், தமிழக அரசு, மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையாலும் மழைநீர் தேங்கிய இடங்கள் முற்றிலும் வடிந்தன.

பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரி மழை அளவான 77 செ.மீட்டரை விட 114 செ.மீட்டர் (கடந்த 29–ந் தேதி நிலவரப்படி) மழை ஏற்கனவே பெய்துவிட்டது. நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

சென்னையில் கடந்த 25–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை 4 நாட்களாக ஓய்வில் இருந்த மழை கடந்த 29–ந் தேதி தலை காட்டியது.

அன்றைய தினம் பகலில் விட்டுவிட்டு மழை பெய்தாலும், திருவான்மியூர், பாலவாக்கம், அடையாறு, சாந்தோம், எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், கீழ்ப்பாக்கம், கொளத்தூர், மாதவரம், புழல் உள்பட சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் இரவு விடிய, விடிய மழை பெய்தது.

இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மீண்டும் மழைநீர் தேங்க தொடங்கியது. மழையால் சென்னையில் உள்ள பள்ளி–கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

கருமேகங்கள்

சென்னையில் நேற்று மதியம் 1 மணி வரை வெயில் தலை காட்டியது. அதன்பின்னர் கருமேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் மழை நீடித்தது. அதன்பின்னர் மழை நின்றாலும், மிக கனமழை பெய்யக்கூடிய வகையில் வானம் கருமேகங்களுடன் சூழ்ந்து அச்சுறுத்தியது.

மழை வந்துவிடுமோ? என்று எண்ணி அனைவரும் சாலைகளில் வேகமாக வாகனங்களை இயக்கி சென்றதை காண முடிந்தது.

இதனால் மாலை 4 மணிக்கே சென்னை நகரம் இரவு போன்று காட்சியளித்தது. சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டு வாகனத்தை இயக்கினர்.

கடல் சீற்றம்

சென்னை காசிமேடு, ராயபுரம், எண்ணூர் உள்பட கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியது. கடல் பயங்கர சீற்றமாக காணப்பட்டது. ராட்சத அலைகளும் எழுந்தன. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

காலையில் கடல் சாந்தமாக இருந்தபோது மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றமானதை தொடர்ந்து அவசர, அவசரமாக கரைக்கு திரும்பினர். இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கரையோரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள், விசைப்படகுகளும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன.

கடல் சீற்றத்தை பார்ப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குவிந்தனர். பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால், ஏராளமான மாணவ–மாணவிகள் கடற்கரை பகுதிக்கு வந்திருந்தனர்.

பாதிப்பு இல்லை…

காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு வந்திருந்த கல்லூரி மாணவ–மாணவிகள் ராட்சத அலை பின்னணியில் செல்போன் மூலம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கனமழை பெய்யாமல் இரவு 7.30 மணி வரை விட்டுவிட்டு சாரல் மழை மட்டுமே பெய்ததால் தாழ்வான இடங்களில் அதிகளவு மழைநீர் தேங்கவில்லை. சாலைகளிலும் மழைநீர் குளம் போல் சூழவில்லை.

வியாசர்பாடி, பெரம்பூர், பேசின் பிரிட்ஜ் உள்பட சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை. இரவு 7.30 மணிக்கு மேல் கனமழை பெய்ய தொடங்கியது.

 

Courtesy : http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/12/01045530/In-ChennaiStrong-windsShowerShowerFurious-Sea.vpf

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.