சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு பெய்த பேய் மழைக்கு புவி வெப்பமடைதல் காரணம் என பிரான்சில் நடைபெற்று வரும் பருவ நிலை மாற்றம் குறித்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
நச்சு வாயுக்கள் வெளியேற்றம் அதிகரித்து பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பதால் ஏற்படும் பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்க 150 நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசீல் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் சென்னையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை குறித்தும் நிபுணர்கள் ஆராய்ந்தனர். மாநாட்டில் கலந்துகொண்ட டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் துணை தலைமை இயக்குனர் சந்திரபூஷண் சென்னை நகரில் பெய்து வரும் இடைவிடாத பலத்த மழைக்கு பூமி வெப்பமயமாகி வருவதுதான் காரணம் என்றார்.
காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழைக்கும் பருவ நிலை மாற்றம்தான் காரணம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் இது போன்ற கன மழை தொடரும் என்பதால் அதனைக் கருத்தில்கொண்டு உள் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும் என பருவ நிலை மாற்றம் மற்றும் சூற்று சூழல் துறை நிபுணர் ராகேஷ் கமால் தெரிவித்தார்.