தண்ணீர் பற்றிய சில உண்மைகள்

2000 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் பொலிவியாவின் மூன்றாவது பெரிய நகரமான கோச்சபம்பாவில் தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து மக்களை திரட்டி சோசலிசத்துக்கான இயக்கத்தின் தலைவரான இவா மொரேல்ஸ் மாபெரும் பேரெழுச்சியில் இறங்கினhர். அப்போராட்டத்தை வைத்து அவர் 2005-இல் பொலிவியாவின் அதிபரானார். தண்ணீர் போராட்டம் ஒருவரை நாட்டின் அதிபர் ஆக்கியது.

அவர் அதிபரான உடன் தண்ணீரை மனித இனத்தின் அடிப்படை உரிமையாக்கும் வகையில் ஐ.நா.வில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். 192 நாடுகள் கொண்ட ஐ.நா.மன்றத்தில் பொலிவியா அதிபர் கொண்டுவந்த இத்தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்ளிட்டு 122 நாடுகளும் எதிராக 41 நாடுகளும் வாக்களித்துள்ளன. எதிர்த்து வாக்களித்த நாடுகளில் பணக்கார நாடுகளான அமெரிக்காஇ பிரிட்டன் கனடா ஆஸ்திரேலியா ஜப்பான் ஆஸ்திரியா இஸ்ரேல் நெதர்லாந்து டென்மார்க் முதலான நாடுகள் அடங்கும். சில நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வில்லை.

தண்ணீரை மனித இனத்தின் அடிப்படை உரிமையாக்குவதற்கு அமெரிக்கா பிரிட்டன் கனடா ஆஸ்திரேலியா ஜப்பான் உள்ளிட்ட 41 பணக்கார நாடுகள் ஏன் எதிர்ப்பு தெரிவித்தன?

உலகம் முழுவதும் உள்ள தண்ணீரில் 97.5 சதவீதம் உபயோகிக்க லாயக்கற்ற கடல் நீர். இதர 2.5 சதவீதம் மட்டுமே உபயோகிக்க தகுந்தது.

கடந்த ஜூலை 28-ஆம் தேதியன்று அனைத்து மக்களும் தூய குடிநீரும் சுகாதார வசதியும் பெற வேண்டும் என்று ஐ.நா. மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தூய குடிநீர் பெறுவதென்பது அடிப்படை மனித உரிமை என்றும் அனைத்து நாடுகளும் இம்மனித உரிமையைக் காக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்மானத்தை தான் 41 பணக்கார நாடுகள் எதிர்த்தன. இந்த எதிர்ப்பின் பின்னணியில் தண்ணீரை வியாபாரம் செய்யும் ஏகபோக நிறுவனங்கள் உள்ளன.
ஏனெனில் இன்று உலகின் வேகமாக வளர்ந்து வரக்கூடிய கொள்ளை இலாபம் தரக்கூடிய தொழிலாக தண்ணீர் வியாபாரம் முன்னணிக்கு வந்துள்ளது. இதனாலேயே தண்ணீரை “நீலத் தங்கம்” என்று பன்னாட்டு கம்பெனிகள் அழைக்கின்றன.

கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள எண்ணெக் கம்பெனிகளின் இலாபத்தில் ஏறத்தாழ 40 சதவீதத்தை தண்ணீர் கம்பெனிகள் அடைந்துள்ளன.

இந்தக் கம்பெனிகள் உலகின் தண்ணீர் ஆதாரங்களான 2.5 சதவீதத்தில் 5 சதவீதத்தை சொந்தம் கொண்டாடுகின்றன. இதிலேயே இவ்வளவு இலாபம் என்றால் இதர நீர் ஆதாரங்களையும் அவைக் கைப்பற்றினால் அவர்களின் லாபம் அதிகரிக்கும் என்பதில் ஐயம் இல்லை.

விவெண்டி சூயஸ் பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங்கள் 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. உலக வர்த்தகக் கழகம் தண்ணீரையும் ஒரு சரக்காகவே ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே தண்ணீரும் ஏற்றுமதி வியாபாரமாகிறது.

ஏழை நாடுகளில் உலக வங்கியின் கடன் திட்டங்களில் பெரும்பாலானவை தண்ணீர் தனியார்மயத்தை நிபந்தனையாகக் கொண்டுள்ளன. இதன்படி தண்ணீர் சுகாதாரம் முதலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி.

தண்ணீர் பற்றிய இன்னொரு அதிர்ச்சி தகவல். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகில் நடந்த எல்லா வன்முறைப் படுகொலைகளையும் விட தண்ணீர் தொடர்பான நோய்களால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 இலட்சம் குழந்தைகள் மரணம் அடைகிறார்கள். தூய குடிநீர் கிடைக்காமல் நோய் தாக்கி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உலகின் மிகக் கொடிய இருபெரும் நோய்களான எயிட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட அதிகம்.
ஐ.நா.வின் கணக்கீட்டின்படி உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். உலகின் 88 கோடியே 40 இலட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. உலகின் வளரும் நாடுகளிலுள்ள ஏறத்தாழ 40 சதவீதம் மக்களுக்கு முற்றாக இத்தகைய வசதிகள் இல்லை. ஐ.நா. மதிப்பீட்டின்படி 2025-ஆம் ஆண்டுக்குள் உலகில் 48 நாடுகள் குடிநீர் பற்றாக்குறையால் தவிக்க நேரிடும். ஏற்கெனவே ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரின்றி மக்கள் வெளியேறும் போக்கு பல ஆப்பிரிக்க நாடுகளிலும் ஈரான் சீனா மற்றும் பாகிஸ்தானிலும் நிகழ்ந்து வருகிறது. இவர்கள் “தண்ணீர் அகதிகள்” என்று குறிப்பிடப்படுகின்றனர்.

இந்தியாவில் தண்ணீரின் நிலை
இந்தியாவில் 1985-இல் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 750. இது 1995-இல் 65000 கிராமங்களாக அதிகரித்து விட்டதாக அரசாங்கமே ஒப்புக் கொள்கிறது. இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட நதிகள் மற்றும் ஏரிகளின் நீர் மாசுபட்டுள்ளது. அந்நீரைக் குடிக்கவோ குளிக்கவோ பயன்படுத்த முடியாது. உதாரணம் கூவம் ஆறு. நாட்டின் மூன்றில் இரு பங்கு மக்களுக்குப் போதுமான சுகாதார வசதிகள் கிடையாது.

இந்தியாவில் ஆண்டுக்கு 10000 கோடி ரூபாய் அளவிற்கு தண்ணீர் வியாபாரம் நடந்து வருகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நீர் நிலைகள் ஏரி, குளம் ஆகியவை அனைவருக்கும் பொது. அனைவரும் பேணி பாதுகாக்க வேண்டும். அனைவருக்கும் சமமாக வாழும் உரிமை, பாதுகாக்கப் பட்ட குடிநீர் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. தண்ணீர் ஒரு அடிப்படை உரிமை என்பதை இந்த உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சுட்டி காட்டி உள்ளது.

தண்ணீர் மனித இனத்தின் அடிப்படைத் தேவை. ஆனால் அந்தத் தேவை என்பது இன்று அரசால் வழங்கப் படாமல் மக்களின் வாங்கும் சக்தியை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எனவே அது வியாபார பொருளாக மாறி விட்டது. மாறாக சட்டப்படி அது நாம் பெற்றே ஆக வேண்டிய உரிமை. இதை தான் தற்போது ஐ.நா.சபையும் அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

ஒரு நாட்டின் ஆட்சியையே தீர்மானிக்கும் நிலையில் உள்ள அரிதான பொருளான தண்ணீரை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டியது அவசியம் அல்லவா!!!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.