திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் தமிழக- ஆந்திர மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டை வீசியதால் அங்கு பதற்றம் நிலவியது. பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக தமிழக- ஆந்திர மீனவர்கள் இடையே பல ஆண்டுகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. இதனிடையே, ஆந்திர மீனவர்கள் அதிகமாக மீன்பிடிப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தமிழக மீனவர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், சின்னமாங்காடு அருகே ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், தமிழக மீனவர் ஒருவரின் படகு தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும், சின்னமாங்காட்டில் உள்ள 10 மேற்பட்ட வீடுகளையும், காவல்துறை வாகனத்தையும் ஆந்திர மீனவர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால், இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் சின்னமாங்காடு, பெரியமாங்காடு, புதுக்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஊரை காலி செய்தனர். தொடர்ந்து அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களுக்கு இடையேயான மோதலில் ஏடிஎஸ்பி ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் காயம் அடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/tn-ap-fishermen-at-war-197960.html