நோய் எதிர்ப்பு சக்தி உள்ள இயற்கை சீனி கருப்பட்டி உற்பத்தியை அதிகரித்து கேன்சர் முதலிய நோய் தாக்கத்தை குறைப்பதற்கு அரசு எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள்

கலப்படம் இல்லாத இயற்கை சீனி – (ஆர்கானிக் சுகர்) கருப்பட்டி

நடுத்தர வயதை கடந்தவர்களில் பெரும்பாலோர் இப்போதும் கருப்பட்டி காபியே அருந்துகிறார்கள். அவர்கள் தான் கையில் ஊன்றுகோல் இல்லாமல் 80 வயதிலும் நடந்து படியேறும் சக்தி படைத்தவர்களாக உள்ளார்கள். நகரத்தில் எங்கும் எதிலும் சர்க்கரை என்ற சூழலிலும் கூட இப்போதும் மக்கள் கருப்பட்டி மேல் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் .


இன்றும் தென்மாவட்டங்களில் கருப்பட்டி என்பதை ஒரு மருத்துவ பொருளாகவும், சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்துகின்றனர்.

நகரத்தில் பிறந்து வளர்ந்து பனை மரம் பார்க்காமல் வளர்ந்த இந்த தலைமுறைக்கு பனை மரம் என்பதன் ஒவ்வொரு அங்குலமும் பயன் கொடுக்ககூடியது. நம் வருங்கால சந்ததியினரையும் நகரத்தில் படிக்கும் சிறுவர்களையும் கோடை விடுமுறையில் கிராமத்திற்கு அழைத்து வந்து பனை மரத்தை பற்றி விளக்கி சொல்லி பதனீர், நொங்கு முதலியவற்றை அவர்கள் அருந்துவதற்கு பழக்க வேண்டும்.
பனை சுனாமியையும் தாங்கும் வலிமை உள்ளது.

தமிழ் எழுத்துக்களும், காப்பியங்களும் இதிகாசங்களும் பனை ஓலையில் தான் எழுதப்பட்டது . இந்த வகையில் முதன் முதலில் அச்சுக்கலை வருவதற்கு முன்பாகவே நூல்களை ஓலை சுவடி வடிவில் வெளியிட்ட பெருமை நம் தமிழருக்கு சேரும். இப்போதும் புகழ் பெற்ற அனைத்து நிறுவனங்களும் ஓலைச் சுவடிகளில் உள்ள குறிப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று விளம்பர படுத்தி தான் தங்களது மருத்துவ பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.

பனை மரம் நம் தமிழ் நாட்டின் மாநில மரம்.

பனைகள் பயிராக பயிரிடப்படாமல் இயற்கையிலேயே தானாக வளர்ந்து பெருகியவை. முழு வளர்ச்சி அடைவதற்கு சுமார் 15 ஆண்டுகள் ஆகும். சுமார் 10 ஆண்டு வரை இவை வடலி என்றே அழைக்கப்படும். நேராக 30 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை உடையவை.

கதர் மற்றும் கிராம தொழில் வாரிய கணக்கின்படி ஒரு பனை மரமானது ஆண்டுக்கு 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு,  8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை கொடுக்கும். மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும்.

பதனீரை ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் காய்ச்சி மண்பானையில் ஊற்றி வீட்டிற்கு அன்றாட தேவைக்கு கருப்பு கட்டி எடுப்பார்கள். அதற்கு வாப்பு கருப்பு கட்டி என்று பெயர். சிறட்டையில் ஊற்றி எடுக்கும் கருப்பு கட்டியும் உண்டு. சுக்கு ஏலம் சேர்த்து சுக்கு கருப்பட்டி செய்வார்கள். இன்னொரு குறிப்பிட்ட பக்குவத்தில் மண்பானையில் ஊற்றி வைத்து எடுப்பது கல்கண்டு (கற்கண்டு). ஏராளமான மருத்துவ குணங்கள் உடையது. ஜலதோசம், இருமல் ஆகியவற்றிற்கு கற்கண்டு கலந்த பால் ஒரு அருமருந்து.

தற்போது மருத்துவ குணம் உள்ள கருப்பட்டிக்கு ஏக டிமாண்ட். அனைவரும் ஆர்கானிக் உணவு என்ற நிலைக்கு மாற தொடங்கியதால் இந்த டிமாண்ட் வந்துள்ளது. சீனியை விடவும் பல மடங்கு விலை கூடுதலாக விற்பனை ஆகிறது. இதனால் தற்போது சீனியை வைத்தும் கருப்பட்டி உற்பத்தி செய்யும் கலப்பட தொழிற்சாலைகள் நகரங்களில் ஏராளமாக முளைத்துள்ளது.

தற்போது தென்னை மரத்தில் இருந்தும் ஈச்சமரத்தில் இருந்தும் கூட கருப்பட்டி தயாரிக்கும் பணி நடக்கிறது. கரும்புசாறில் இருந்து தயாரிக்கப்படும் மண்டை வெல்லமும் தற்போது கருப்பட்டியாக உருமாறுகிறது. அரசும் உணவு கலப்பட அதிகாரிகளும் இவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பனையில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியின் பயன்கள்

கருப்பட்டியில் சுண்ணாம்பு சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் ஏராளமாக உள்ளது. எனவே எல்லா நோயாளிகளும் இவற்றை சாப்பிடலாம்.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். இப்போதும் இந்த நடைமுறை கிராமங்களில் உள்ளது.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள்இ கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம்.

பலம்தரும் பனங்கற்கண்டு

பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம்.

குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள்இ கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

பனங்கற்கண்டில் உள்ள உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Anti oxidants) நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது, நாம் அன்றாட வாழ்வில் உற்சாகமாக செயல்படுவதற்கும் உதவி செய்கிறது. இரும்புச்சத்துஇ பொட்டாசியம், சிங்க், வைட்டமின் B1, B2, B3  மற்றும் Low Glycemic Index உடையதாகவும் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததாக இருக்கிறது.

பல்வேறு மருத்துவ சிறப்புகளைப் பெற்றுள்ள பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

நீண்ட நாட்களாக வயிற்றுப் புண் நோயால் அவதியுற்று வருபவர்கள், வாயிலிருந்து புகை வருவது போன்ற உணர்வு மற்றும் நெஞ்சுக்கரிப்பு போன்ற தொந்தரவுகளால் அவதியுறும் நோயாளிகள் போன்றோர் கொத்தமல்லி கஷாயத்தில் பனங்கற்கண்டை கலந்து பருகலாம்.

நீண்ட நாட்களாக சளி தொந்தரவுகள், நுரையீரல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் திரிகடுகு கஷாயத்தில் பனங்கற்கண்டு கலந்து பருகலாம். ஆனால், இவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாதவிடாய் சீராக வராத இளம்பெண்களுக்கு பனங்கற்கண்டு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கிறது. எள்ளு கஷாயத்தில் திரிகடுகு சூரணத்தோடு தேவைக்கேற்ப சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து பயன்படுத்தி வந்தால் மாதவிடாய் சீராகும்.

நீரிழிவு நோயாளிகள் மருத்துவர் ஆலோசனைப்படி நெல்லிச் சாற்றுடன் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் அந்த நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

சுவாசம் மற்றும் சைனஸ் பிரச்னை உடையவர்கள் நீர்த்து இருக்கிற பாலில் பனங்கற்கண்டு, சிறிதளவு சுக்குப்பொடி, மஞ்சள்பொடி கலந்து பயன்படுத்தலாம்.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் சாப்பிட்ட பின்பு நமது வாயில் கசப்புத்தன்மை தோன்றினால், வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக சிறிதளவு பனங்கற்கண்டை சாப்பிடலாம். அதேபோல் அந்த மருந்துகளை பாலில் கலந்து குடிக்குமாறு மருத்துவர் பரிந்துரைக்கும்போதும் வெள்ளைச் சீனிக்கு பதிலாக பனங்கற்கண்டை சேர்ப்பது நல்லது. இதனால் மருந்தின் வீரியம் குறையாமல் இருப்பதோடு உடலின் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

தமிழகத்தின் பாரம்பரிய முறைகளின்படி தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு, வெள்ளை சர்க்கரையைவிட மிகவும் சிறந்தது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுபோன்ற நமது பாரம்பரிய உணவுப் பொருட்களை நாமும் நம் சந்ததியினரும் பயன்படுத்தும் வண்ணம் செய்தால் அனைவரும் நோய் நொடிகளின்றி வளமோடு வாழலாம்’’

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலில் தேவையான அளவு பனங்கற்கண்டு, சிறிதளவு ஏலக்காய் கலந்து காலை, மாலை இருவேளையும் பருகி வருவதால் உடலுக்கு உற்சாகமும் நிறைவான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இந்தப் பால் வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, நல்ல தூக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பருகி வருவதால் ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

இவ்வளவு நன்மை தரும் பனைமரங்கள் தற்போது அழியும் நிலையில் உள்ளது. உண்மையில் பனைமரங்கள் வளர்த்தால் நிலத்தடி நீர் மட்டம் குறையாது. மண் அரிப்பு ஏற்படாது. கடும் வறட்சி ஏற்படாது. பனையின் பயன்பாட்டை ஊக்குவிக்க தமிழக அரசு கதர் கிராம தொழில்வாரியத்தின் மூலம் பனை வெல்ல கூட்டுறவு சம்மேளனம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி தமிழகம் முழுவதும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்து மாவட்டத்திற்கு ஒரு உதவி இயக்குனர் என நியமித்து ஆரம்ப காலத்தில் பணிகள் செய்தது. ஆனால் நாளாவட்டத்தில் இதற்கு அரசு ஒதுக்கும் உதவி தொகை மிக மிக குறைவு என்பதால் எந்த கூட்டுறவு சங்கமும் சரியாக செயல்படவில்லை. அரசியல் காரணங்களுக்காக பனை தொழிலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் குறைந்து கொண்டே வந்தன. இதில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் பயிற்சிக்கும் அரசு எந்த தொகையும் செலவிடவில்லை.

பனையின் பலன் தெரியாமல் பனையை வெட்டி சாய்ப்பதிலேயே அனைவரும் முழு முயற்சியாக இருக்கும் போது இளைஞர்களுக்கு திடீர் என ஏற்பட்ட விழிப்புணர்வால் ஆங்காங்கே தற்போது ஏரி குளம் கரைகளில் பனை விதைகள் நடுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தற்போது பள்ளி குழந்தைகளும் கூட இந்த செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். பனை பற்றிய விழிப்புணர்விற்கு முதல் காரணம் இதனை நாம் தமிழர் கட்சி தலைவர் திரு.சீமான் அவர்கள் கையில் எடுத்து அவரது கட்சியினரை ஆங்காங்கே பனை விதைகளை நடவு செய்ய ஏற்பாடு செய்தது தான்.

முதன் முதலில் அவர் தொடங்கிய இந்த திட்டம் தற்போது எல்லா சமூக ஆர்வலர்களாலும் பின்பற்றப்படுகிறது. தற்போது அரசின் பங்கிற்கு மேம்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பனை தொழிலை இலகுவாக்குவதற்கு பனை ஏறும் மிசின்களை அரசு மானிய விலையில் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி அதனை பனை தொழிலாளர்கள் இலவசமாக பயன்படுத்த ஆவண செய்தால் கிராம தொழிலும் வளர்ந்ததாக அமையும். கிராம பொருளாதாரம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இயற்கை உணவு பொருளை மக்கள் உபயோகிப்பது அதிகம் ஆவதால் புற்று நோய் முதலிய உயிர்கொல்லி நோய்களின் தாக்கமும் குறையும். இதற்கு அரசு ஆவண செய்யுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.