வட கிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து, கடந்த 2 மாத காலத்தில் சென்னை மண்டலத்தில் பெய்துள்ள மழைப் பொழிவு, பல ஐரோப்பிய நாடுகளின் தேசிய சராசரியைவிட அதிகம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 649.3 மில்லி மீட்டர் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தற்போது இது 129 சதவீதம் அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளது. தற்போதுவரை சென்னையில் 1,487.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரியின் ஆண்டு சராசரி மழைப்பொழிவான 697 மி.மீ. என்ற அளவைக் காட்டிலும், 63 சதவீதம் தற்போது அதிகரித்துள்ளது. இதுவரை புதுச்சேரியில் 1,138 மி.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டலத்தில் கடந்த 2 மாத காலத்தில் பெய்துள்ள மழையின் அளவு, அயர்லாந்து, நார்வே, இங்கிலாந்து, ஸ்பெயின், வட கொரியா, தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளின் ஆண்டு சராசரி மழைப் பொழிவை விட அதிகமாகும். அதுமட்டுமின்றி, இந்தியாவின் தேசிய சராசரியைவிடவும் 40 சதவீதம் அளவிற்கு அதிக மழைப் பொழிவை சென்னை மண்டலம் தற்போது சந்தித்துள்ளது.
இந்த ஆண்டு, தமிழகத்தின் 23 மாவட்டங்களில், ஆண்டு சராசரியைவிட, மழை அதிகமாக பதிவாகியுள்ளது. செயற்கைக்கோள் வரைபடத் தகவலின்படி, சென்னை மாநகரத்தில் மட்டும் சிறியதும், பெரியதுமான 7,633 தெருக்கள் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த வெள்ள பாதிப்பால், கடந்த 3 நாட்களில் தமிழகத்தில் செல்போன் சேவையில் 50 சதவீதமும், தரைவழி தொலைபேசி இணைப்புகளில் 20 சதவீதமும் தடைபட்டிருந்தன. வெள்ள பாதிப்பால், தமிழகத்தில் இதுவரை 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக அசோசெம் தெரிவித்துள்ளது
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. டிசம்பர் முதல் வாரம் வரையிலான கால கட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்டு சராசரியைவிட 215 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 188 சதவீதமும், வேலூர் மாவட்டத்தில் 148 சதவீதமும், சென்னை மாவட்டத்தில் 129 சதவீதமும் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது.
இதேபோல், ஆண்டு சராசரியைவிட நெல்லை மாவட்டத்தில் 109 சதவீதமும், விழுப்புரம் மாவட்டத்தில் 105 சதவீதமும் அதிகமாக மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் ஆண்டு சராசரியைவிட 91 சதவீதமும், கடலூர் மாவட்டத்தில் 78 சதவீதமும் அதிகம் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Courtesy : http://ns7.tv/ta/new-info-tn-rains.html