பாரீஸ்,
புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்க பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் உடன்பாடு எட்டப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் உலக தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
உடன்பாடு
பாரீசில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் நிறைவு அடைந்தது. 195 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு கீழாக (3.6 டிகிரி பாரன்ஹீட்) கட்டுப்படுத்துவதற்கு வகை செய்யும் உடன்பாட்டினை, பிரான்ஸ் வெளியுறவு மந்திரி லாரன்ட் பாபியஸ் தாக்கல் செய்தார். இந்த உடன்பாட்டினை ஏற்கும்படி உலக நாடுகளை பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கேட்டுக்கொண்டார்.
இந்த உடன்பாட்டினை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு, அங்கீகரித்தன. இந்த உடன்பாடு புவியை வெப்பம் அடையச்செய்கிற பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி, புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த உதவும். உடன்பாட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக உடன்பாட்டின் இறுதிவடிவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
நரேந்திர மோடி
இந்த உடன்பாட்டை உலக தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவிக்கையில், “பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாடு முடிவில், யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை, இது பருவநிலை நீதிக்கு கிடைத்த வெற்றி. பசுமையான எதிர்காலத்துக்காக அனைவரும் பாடுபடுகிறோம்” என கூறினார்.
மேலும், “பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான உலக தலைவர்களின் ஒட்டுமொத்த விவேகத்தையும், பாரீஸ் மாநாட்டின் ஆழ்ந்த சிந்தனையும், உடன்பாடும் நிரூபிக்கின்றன” எனவும் அவர் கூறினார்.
ஒபாமா- கேமரூன்
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கருத்து தெரிவிக்கையில், “இந்த புவியை காப்பாற்றுவதற்கு நாம் பெற்றுள்ள சிறப்பான வாய்ப்பினை இந்த உடன்பாடு நிரூபித்துக்காட்டுகிறது. இந்த தருணம், உலகத்துக்கு ஒரு திருப்புமுனை என நான் நம்புகிறேன். இந்த புவி சிறப்பான வடிவத்தில் இருக்கும் என்று இந்த மாநாட்டு உடன்பாட்டின் முடிவில் இருந்து நாம் இன்னும் நம்பிக்கை கொள்ளலாம்” என குறிப்பிட்டார்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், “புவியின் எதிர்காலத்தை காப்பாற்றிக்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பெரிய நடவடிக்கை இது. ஒற்றுமை, லட்சியம், விடாமுயற்சி என்ன செய்ய முடியும் என்பதை இந்த உடன்பாடு காட்டுகிறது” என கூறினார்.
ஜெர்மனி, சீனா
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், “இந்த உடன்பாடு, உலக பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உலகின் ஒட்டுமொத்த சமூகமும் செயல்பட வைக்கும்” என்றார்.
“சர்வதேச ஒத்துழைப்பில் இது புதிய தொடக்கம்” என சீனா வர்ணித்துள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், “இந்த உடன்பாடு புவி என்றென்றும் நினைவில் வைத்திருக்கத்தக்க வெற்றி. எந்தவொரு நாடும் தனித்து சாதித்திருக்க முடியாத ஒன்று, கூட்டுசேர்ந்து பணியாற்றியதின் விளைவாக சாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
http://ns7.tv/ta/prime-minister-narendra-modi-described-victory-climate-justice.html