மிரட்டும் கடல் சீற்றம் : தமிழக அரசின் நடவடிக்கை தேவை
புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கடல்நீர் மெல்ல மெல்ல உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முட்டுக்கட்டை போடாவிட்டால், அடுத்த, 50 ஆண்டுகளில் நிலத்தடி நீர் முழுவதும், கடல்நீராக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழக அரசின் கடமை.
சென்னையின் கிழக்கு பக்க எல்லையாக, வங்காள விரிகுடா கடல் உள்ளது. கடற்கரை பகுதியில், மீனவர் மட்டுமே வசித்து வந்தனர். அப்போதெல்லாம் ஆழ்துளை கிணறுகள் கிடையாது. மீனவர்கள் பயன்பாட்டிற்கு, கடற்கரையில், ஐந்தடி ஆழத்தில், சுவையான நிலத்தடி நீர் கிடைத்தது. கடற்கரையை அடுத்துள்ள நிலப் பகுதியில், சதுப்பு நிலங்கள், ஏரி, குளங்கள் என, பல்வேறு வகையான நீர்நிலைகள் இருந்தன. இதனால், மழைநீர் போதிய அளவுக்கு சேகரிக்கப்பட்டு, நிலத்தடி நீர்வளம் அதிகமாக இருந்தது. இதில், வெள்ளப்பெருக்கு காலங்களில் அதிகப்படியான நன்னீர் கடலுக்கு செல்லாமலும், கடல்நீர் உட்புகாமலும் தடுப்பதில், சதுப்பு நிலங்கள், முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு காலத்தில், மீனவர்கள் மட்டும் வசித்து வந்த கடற்கரை பகுதிகளில், மேற்கத்திய மோகம் காரணமாக, கடற்கரை, “ரிசார்ட்’கள் அதிகரித்தன. இதன் பின் கடந்த, 30 ஆண்டுகளில், கடற்கரையோரப் பகுதிகளில், மக்கள் வீடு கட்டி குடியேறுவது பலமடங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அதிகரித்து வரும், அடுக்குமாடி குடியிருப்புகளின் தேவைக்காக, அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்ட, ஆழ்துளை கிணறுகளும், நீர் நிலை பகுதிகள், கபளீகரம் செய்யப்பட்டதும், கடல்நீர் உட்புக, சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதாக அமைந்து விட்டன. இந்நிலை தொடர்ந்தால் அடுத்த, 50 ஆண்டுகளில் சென்னையின் பெரும் பகுதி நிலத்தடிநீர், கடல்நீராக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தீர்வு என்ன? கடல்நீர் உட்புகுவது குறித்து, பல ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு, மாநில அரசுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி வரும், மத்திய அரசின் நிலத்தடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கடற்கரையோரம், நிலத்தடிநீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதே, கடல்நீர் உட்புக முக்கிய காரணம். ஒரு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தால், அதை சுற்றி, ஒன்று முதல் ஒன்றரை சதுர கி.மீ., பரப்பளவிற்கு, கடல்நீர் உட்புகுகிறது. கடற்கரையில் இருந்து, 3 கி.மீ., தூரத்தில், ஆழ்துளை கிணறு அமைப்பதாக இருந்தால், 30 – 35 அடி ஆழம் மட்டுமே எடுக்க வேண்டும். சமீபத்திய கணக்கெடுப்பின் படி, கிழக்கு கடற்கரை சாலை, வடசென்னை பகுதிகளின் பல இடங்களில், கடல்நீர்
உட்புகுந்து விட்டது. தென்சென்னையை பொறுத்தவரை, திருவான்மியூர், பாலவாக்கம், வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி ஆகிய இடங்களில், பகுதி பகுதியாக கடல்நீர் உட்புகுந்துள்ளது.
பீசோ மீட்டர்: கடல்நீர், நிலத்தடி நீருடன் கலப்பது, ‘பீசோ மீட்டர்’ என்ற கருவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. கடற்கரை ஓரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அதில், அக்கருவியை பொருத்தி, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எடுத்து, கருவியில் சேகரமாகியுள்ள விவரங்களை பார்த்தால், எந்த இடத்தில் கடல்நீர் உட்புகுந்துள்ளது, எந்த இடத்தில் நிலத்தடிநீர் அதிகரித்துள்ளது என்பது தெரிய வரும். அந்த தகவலின் அடிப்படையிலேயே, மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். ஆனால், சென்னையில் கடல்நீர் உட்புகும் பிரச்னை, மிகவும் ஆபத்தாகவே உள்ளது. இதை தடுக்க இருந்த, நீர்வள அமைப்புகள், மனிதர்களால் சிதைக்கப்பட்டதே முக்கிய காரணம். ஆழ்துளை கிணறுகள் மூலம், அதிகளவிலான நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது; இது தடுக்கப்பட வேண்டும்.
திருப்பி அனுப்பும் வழி: கடல்நீரை திருப்பி அனுப்ப ஒரே வழி, நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்துவது தான். இது, மழைநீர் சேகரிப்பால் மட்டுமே முடியும். கடந்த, 2003ல் தமிழக அரசு அறிவித்த மழைநீர் சேகரிப்பு திட்டம், நல்ல பலன் தந்தது. அத்திட்டத்துக்கு, மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டும். நிலத்தடியில் உட்புகுந்துள்ள, 1 யூனிட் (1,000 லிட்டர்) கடல்நீரை வெளியேற்ற, நாம் ஒன்பது யூனிட் (9,000 லிட்டர்) நல்ல தண்ணீர் உட்செலுத்த வேண்டும். “இன்ஜெக்ஷன் ஜெட்’ இயந்திரத்தை பயன்படுத்தினால், இது சாத்தியமாகும். குடியிருப்புகளால் காணாமல் போன நீர்நிலைகளை கண்டுபிடித்து, புதுப்பிக்க வேண்டும். அப்போது தான், கடல்நீர் உட்புகும் ஆபத்தில் இருந்து, சென்னையை காப்பாற்ற முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
27 குளங்கள்: இதுகுறித்து, ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த, ‘நீர் எக்ஸ்னோரா’ பிரதிநிதி சேகர் கூறியதாவது: கிழக்கு கடற்கரை சாலையில், 60க்கும் மேற்பட்ட குளங்களை, நான் பார்த்துள்ளேன். முன்பெல்லாம், அதில் மழைநீர் தேங்கி காட்சியளிக்கும். தற்போது, குளங்களை தேட வேண்டி உள்ளது. ஈஞ்சம்பாக்கத்தில் மட்டும், 27 குளங்கள் இருந்தன. அதில், பல குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டு விட்டன. எனவே, அவற்றை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் நீதிமன்ற உதவியை நாடி உத்தரவும் பெற்றோம். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவையே மதிக்கவில்லை. ஒரே ஒரு குளம் மட்டுமே
மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
குஜராத்தில் முன்னோடி திட்டம்: தமிழகத்தை போலவே, குஜராத் மாநிலமும், கடலை ஒட்டி அமைந்துள்ளது. அங்கும், 1980ம் ஆண்டுகளில், கடல்நீர் உட்புகுந்தது கண்டறியப்பட்டது. கடல்நீர் மேலும் உட்புகுந்து நிலத்தடி நீர்மாசடையாமல் இருக்க, பிரமாண்ட திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அது தான் கடற்கரையோரம், 400 கி.மீ., தூரத்திற்கு பிரமாண்ட கால்வாய் அமைப்பது. அந்த கால்வாயுடன், மாநிலத்தில் உள்ள அனைத்து நதிகளும் இணைக்கப்படுகின்றன. இத்திட்டம், 2005ல் துவக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் இருக்கும் குளங்களையும், ஏரிகளையும் தொலைத்து நிற்கிறோம்.
நெதர்லாந்தில் கட்டுப்பாடு: கடலால் சூழப்பட்ட நெதர்லாந்து நாடு, கடல் மட்டத்தை விட, கீழான பகுதி. அங்கு, நிலத்தடி நீரில், கடல்நீர் ஊடுருவும் வாய்ப்பு அதிகம். எனவே, நிலத்தடி நீர் எடுப்பதை, அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஒரு நாளைக்கு, குறிப்பிட்ட அளவு லிட்டர் தண்ணீர் மட்டுமே, நிலத்தில் இருந்து உறிஞ்சட வேண்டும் என்பது, விதியாக உள்ளது. அதற்கு மேல் உறிஞ்சினால், கடல்நீர் உட்புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் அரசின் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகின்றனர்.
மடிப்பாக்கத்தில் உப்புநீர் ஏன்? வங்காள விரிகுடாவில் இருந்து, 7 கிலோ மீட்டர் தொலைவில், மடிப்பாக்கம் அமைந்திருந்தாலும், அப்பகுதியில் சில இடங்களில் நிலத்தடி நீர், கடல்நீரை போலவே உவர்ப்பு தன்மை கொண்டதாக காணப்படுகிறது. இது கடல்நீர் உட்புகுந்ததால் ஏற்பட்டதில்லை என்கின்றனர். பல நூறு ஆண்டுகளுக்கு முன், மடிப்பாக்கம் பகுதி, குட்டையாக இருந்ததால், அங்கு பல ஆண்டுகளாக தேங்கிய தண்ணீர், தாதுக்களுடன் கலந்து, உவர்ப்பு தன்மை ஏற்பட்டு விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்த தீர்வு, அங்குள்ள மண் வளத்தை மாற்றுவது தான். இது இந்தக் காலத்தில் சாத்தியமில்லை.
நிலத்தடி நீர் திருட்டு: சென்னை புறநகர் பகுதிகளில், நாள் ஒன்றுக்கு பல கோடி லிட்டர் நிலத்தடி நீர், கடந்த, 15 ஆண்டுகளாக, டேங்கர் லாரிகள் மூலம் உறிஞ்சப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம், 200 அடி ஆழத்தில் சென்றுவிட்டது. இதை, தமிழக அரசு தடுத்து நிறுத்த, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதே நிலை நீடித்தால், அடுத்த, 20 ஆண்டுகளில், நிலத்தடி நீரே இல்லாமல், கடல் உட்புக ஏராளமான வாய்ப்பு உள்ளது.